மனச்சிதைவு நோய் SCHIZOPHRENIA என்றால் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்
மனநோய்களிலேயே மிகவும் தீவிரமான நோய் மனச்சிதைவு நோய் SCHIZOPHRENIA. இந்நோய் ஒருவரது முழு வாழ்க்கையையும் திசைமாற்றி, தடுமாற்றி, வீணாக்கி விடக் கூடியது. மனச்சிதைவு நோயினைத்தான் மக்கள் எளிதில் அடையாளம் கண்டு ‘பைத்தியம்’ எனும் அடைமொழிக்குள் வைத்துள்ளனர்.
முதலில் இந்தப் பெயர் எதற்காக வந்தது என நாம் புரிந்து கொள்வோம்.
Schizos – Phrenos என்ற கிரேக்க-லத்தீன் வார்த்தைகளின் கூட்டில் தான் இந்நோய்க்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
அகராதிப்படி நோக்கினால் இதை பிளவுபட்ட மனம் என்றுதான் கூறவேண்டும். ஆனால் எண்ணம், செயல் ஆகிய இரண்டையும் சிதைக்கும் தன்மையுடைய இந்நோயை மனச்சிதைவு SCHIZOPHRENIA என்று கூறுவதே அதை விளக்க உதவும்.
மனத்தின் காரணமாகவே எண்ணங்கள் உருவாகின்றன. அவற்றின் வெளிப்பாடுகளாகவே சொற்களும், செயல்களும் அமைகின்றன. மனச்சிதைவு ( SCHIZOPHRENIA ) நோயில் இவை பாதிக்கப்பட்டது மிகவும் வெளிப்படையாகத் தெரியும். இதனாலேயே இந்நோயினை எண்ணம் பாதிக்கப்படும் தீவிர நோய் (Thought Disorder) என்று வர்ணிக்கிறார்கள்.
உணர்ச்சிப் பிறழ்வு நோயை மனநிலை பாதிக்கப்படும் நோய் என்று தனியாகக் குறிப்பிட்டு அடையாளம் கண்டாலும், மனச்சிதைவு நோயிலும் மனநிலை பாதிக்கப்படுகிறது.
உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் அறிகுறியாக வெளியே தெரிவது போல மனச்சிதைவு நோய்க்கும் அறிகுறிகள் வெளியே தெரியும்.
இவ்வளவு வெளிப்படையாக இந்நோயின் அறிகுறிகள் இருந்தும், இன்னும் நம் நாட்டில் நிலவும் பல மூட நம்பிக்கைகளால் இதை நோய் என்று ஏற்றுக்கொள்ளாமல் தெய்வ குற்றம், கிரகங்களின் கோளாறு, திருஷ்டி, சூன்யம், ஏவல் என்றெல்லாம் மக்கள் தத்தம் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் தவறாகக் கருதுகிறார்கள். இதனாலேயே மனச்சிதைவு ( SCHIZOPHRENIA PATIENTS ) நோயாளிகள் ஆரம்பக் கட்டத்தில் மனநல மருத்துவ உதவி பெறுவதற்கு பதில் சாமியார்கள், பூசாரிகள், மந்திரவாதிகள், சோதிடர்கள் ஆகியோரிடம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்தக் கால விரயம் நோயை இன்னும் தீவிரப்படுத்துகிறது. இதற்கு இன்னொரு கோணமும் உண்டு.
மனநல மருத்துவம் குறித்து இன்று பரவலாக விழிப்புணர்வு பெருகியிருந்தாலும், முழுமையான விழிப்பு உணர்வு சமூகத்தில் வந்து விடவில்லை.
மனநல மருத்துவம் குறித்து ஒரு சமூக நாணம் (Stigma) இருப்பதால், மனநல மருத்துவரைச் சந்திக்கவே பலர் இன்னும் தயங்குகிறார்கள். இந்த மூடநம்பிக்கையும் பிற்பட்ட கண்ணோட்டமும் கிராமங்களில் தான் உள்ளன என்பதில்லை. நகரங்களிலும், படித்தவர் மத்தியிலும் இப்படியொரு பொய்யான கருத்தும், போலியான கண்ணோட்டமும் இருக்கிறது. இதனாலேயே பல மனச்சிதைவு நோயாளிகள் எளிதில், விரைவில் நலமடையும் சாத்தியங்கள் இருந்தும் கலாச்சார மூட நம்பிக்கைகளால் வாழ்நாள் முழுதும் நோயுற்றே அழிகின்றனர்.
மனச்சிதைவு நோய் ( SCHIZOPHRENIA ) தீவிரமான நோய் தான் என்றாலும், ஆரம்பத்திலேயே சிகிச்சை தந்தால் நலமடையும் சாத்தியங்கள் உண்டு. இந்நோயில் உள்ள இன்னொரு சிக்கல் சிலர் முற்றும் குணமடைகிறார்கள். சிலர் வாழ்நாள் முழுதும் அவதிப்படுகிறார்கள்.
விரைவிலேயே சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டாலும் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள்தான் முழுதும் குணமடைகிறார்கள். இதனாலேயே சிலருக்கு மனநல மருத்துவம் என்றால் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடும் நிலைமை என்ற தவறான எண்ணம் உருவாகியுள்ளது.
நோயின் தன்மை, நோயுற்றவரின் தன்மை ஆகிய இரண்டும் சேர்ந்துதான் இந்நோயுள்ளவர் விரைவில் நலமடையும் சாத்தியத்தை உருவாக்குகின்றன.
ஒரு தேர்ந்த மனநல மருத்துவ நிபுணரின் உதவியோடு இந்நோயை எந்தக் கட்டத்திலும், முழுமையாகவோ அல்லது ஒரளவாகவோ மட்டுப்படுத்த முடியும்.
மனச்சிதைவு நோய் எண்ணம் பாதிக்கப்பட்ட நோய் என்பதில் எந்த நிபுணருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் சிலர் மனச்சிதைவு என்பதை பல்வகை நோய்களின் தொகுப்பாக நினைக்கிறார்கள், சிலர் இதைப் பல்வேறு வெளிப்பாடுகள் உடைய ஒரே நோயாகக் கருதுகிறார்கள். இதற்குக் காரணம் மனச்சிதைவு நோய் பல்வகைகளில் வெளிப்படுவது தான். சிலருக்குச் சில அறிகுறிகள் மட்டுமே இருக்கும். இன்னும் சிலருக்குப் பல அறிகுறிகள் தென்படும், வெகு சிலருக்கு ஓரிரு அறிகுறிகள் மட்டுமே இருக்கும்.
வெறும் அறிகுறிகளை வைத்து மட்டுமே இந்நோயைத் தீர்மானிக்க முடியாத கட்டத்தில், மனவியல் பரிசோதனைகள் உதவும். அவற்றுள் குறிப்பாக ரோஷா என்பவர் கண்டுபிடித்த ஒரு பரிசோதனை முறை இதை உறுதிப்படுத்தும்.
மனவியல் நிபுணர்கள் ரோஷா தவிரவும் கேள்விப்பட்டியல்களைப் பயன்படுத்தியும் இந்நோயினைத் தீர்மானிக்கின்றனர். பெரும்பாலும் மனநல மருத்துவர்கள் அறிகுறிகளை வைத்தே இந்நோயினை அடையாளம் கண்டு கொண்டாலும் மிகவும் ஆரம்பக் கட்டங்களில் மனவியல் வல்லுநர்கள் உதவியையும் நாடுவது தான் ஆரோக்கியமான அணுகுமுறை.
மனச்சிதைவு நோயினை ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, மூளையின் அதிர்வுப் பதிவு போன்றவற்றால் கண்டுபிடிக்க முடியாது. சில நவீன முறைகளில் இந்நோயாளிகளின் மூளையின் சில பகுதிகளில் வடிவ மாற்றங்கள் உள்ளன என்று கண்டுபிடித்துள்ளார்கள். இது இன்னும் இறுதியாகவும் உறுதியாகவும் நிரூபிக்கப் படவில்லை என்பதால் தற்பொழுதில் மனநல மருத்துவப் பரிசோதனை மூலமே இந்நோய் கண்டுபிடிக்கப்படுகிறது.
இந்நோயினை கண்டுபிடிக்கச் சில வழிமுறைகளையும் விதிகளையும் அதிகாரபூர்வமான நூல்கள் வரையறுத்துள்ளன. ஒருவரை மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர் என்று தீர்மானிக்கக் கீழ்காணும் அறிகுறிகள் உதவும்.
1. மனச் சிதைவுக்குள்ள பிரத்யேக அறிகுறிகள்:
கீழ் உள்ள பட்டியலில் இரண்டு அறிகுறிகளாவது ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
– பிறழ் நம்பிக்கைகள் (Delusions)
– புலன்களில் பேதலிப்பு (Hallucination)
– பேச்சில் தெளிவும் கோர்வையும் இல்லாமை
– வித்தியாசமான விபரீதமான நடவடிக்கைகள்
– உணர்ச்சிகளை வெளிபடுத்த இயலாமை, செயலில் நோக்கமின்மை, கவனக் குறைவு, சமூகத்திலிருந்து ஒதுங்குதல் (இவை மனச்சிதைவு நோயின் நெடுநாள் தாக்கத்தினாலேயே ஏற்படும்)
2. சமூகப் பங்கேற்பில் பின்னடைவு:
இயல்பாகப் பேசிப்பழகுபவர் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி, தனிமை நாடி, தன்மேலுள்ள அக்கறையை மறந்து (குளிப்பது, உண்பது போன்றவற்றிலும் அக்கறையிழந்து), முன்பைவிட இப்பொழுது செய்யும் காரியங்களில் ஆர்வமும் ஆற்றலும் குறைவது ஆகியவையே சமூக பின்னடைவு என்று (Social Dysfunction) குறிப்பிடப்படுகிறது.
3. நோய்க் காலம்:
குறைந்த பட்சம் ஆறு மாதங்களாவது அறிகுறிகள் தொடர்ந்து தென்பட வேண்டும். முதலில் குறிப்பிட்ட அறிகுறிகளில் முக்கியமானவை தொடர்ந்து ஒரு மாதமாவது ஒருவரிடம் தென்பட வேண்டும். அப்போதுதான் ஒருவரை மனச்சிதைவு நோயாளி என்று கூற வேண்டும் என்று நூல்கள் கூறுகின்றன. தேர்ந்த நிபுணர்கள் ஒரு மாதத்திற்குள் கூட இந்நோயை அடையாளம் காண முடியும்.
4.மனநிலை பாதிப்பு நோய்கள் போன்றவை உடனிருக்கக் கூடாது.
சில மனச் சிதைவு நோயாளிகளுக்கு, இந்நோயின் தாக்கத்தின் போதே, கூடவே மனநிலை மாறுதல்களும் ஏற்படுவதுண்டு. ஆனால் அவ்வகை மனநிலை மாறுதல்கள் தொடர்ந்து இருந்தால் இதனை மனச்சிதைவு நோய் என்று கூறமுடியாது.
5. உடல் நலக் கோளாறு/ நோய் / போதை பழக்கத்தின் தாக்கங்கள் இருக்கக் கூடாது
-சில மனச்சிதைவு நோயாளிகளுக்குக் கூடவே நீரிழிவு, இரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் இருக்கலாம். ஆனால் அந்த உடல் நோய்களின் தாக்கத்தால் அவர்கள் எண்ணத்திலும் செயலிலும் மாறுதல்கள் இருந்தால் அதனை மனச்சிதைவு நோயாகக் கருதக் கூடாது.
மேற்குறிப்பிட்ட வகையில் ஒருவரை நோக்கினால் அவருக்கு மனச்சிதைவு நோய் உள்ளதா இல்லையா என்று தீர்மானிக்க முடியும். இதை மேலும் தெளிவாக விளங்கிக் கொள்ள இந்நோயின் தனிப்பட்ட அறிகுறிகளைச் சற்று விளக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. பிறழ் நம்பிக்கை எனும் Delusion
இந்நோயின் ஒரு முக்கிய அறிகுறி. எந்த விதமான அடிப்படையும் இல்லாமல், நியாயமான சாத்தியங்கள் எதுவுமே இல்லாமல் ஒரு விஷயத்தை உண்மை என்று நம்புவதே பிறழ் நம்பிக்கை.
பிறழ் நம்பிக்கைகள் பல விதங்களில் வெளிப்படும் தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத மனிதர் தன்னை எதிர்த்து சதி செய்வதாகத் தோன்றலாம். உணவில் எல்லோரும் விஷம் கலப்பதாகத் தோன்றலாம். காரணங்கள் எதுவுமேயில்லாமல் திருமணத் துணைவரை சந்தேகப்படலாம். என்று பல விதங்களில் பிறழ் நம்பிக்கைகள் ஏற்படும் இவற்றை உண்மையல்ல என்று நிரூபிக்க எவ்வளவு பேசினாலும் முயற்சித்தாலும் அவர்கள் மனதில் அந்த பிறழ்நம்பிக்கை கொஞ்சமும் மாறாது, குறையாது.
2. புலன்களில் பேதலிப்பான பதிவுகளை Hallucination என்று அழைக்கிறார்கள்.
மனச் சிதைவு நோயில் இவை மட்டுமே கூடப் போதும் என்று சில நிபுணர்கள் கருதுகிறார்கள். புலன்கள் ஐந்திலும் பதிவாகும் விஷயங்களே எண்ணங்களுக்கு மூலம். மனச் சிதைவு நோயில் மிக அதிகமாகச் செவிப்புலன் பேதலிப்பு தென்படும். அதாவது யாருமே இல்லாத இடத்திலும் கூட அவர்கள் காதுகளில் யாரோ பேசுவது போலக் கேட்கும். இந்தக் குரல்களின் கட்டளைக்கேற்ப அவர்கள் நடந்து கொள்வதுமுண்டு.
சிலர் காதில் கேட்கும் குரல்களுக்கு உரக்க பதில் கூறுவதும் முணுமுணுப்பதும் நமக்குத் தெரியும். அவர்கள் தங்களுக்குள்ளாகவே தமக்குத்தாமே ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வகையிலேயே இது வெளித் தெரியும்.
குரல்களுக்குப் பதில் கூறாமல் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் மனநோயாளிகளின் பார்வையில் வெறுமையும், கவனக்குறைவும் தெரிய வரும்.
மனச்சிதைவு நோயைப் பொறுத்தவரை காதில் குரல்கள் ஒலிப்பது தான் மிகவும் முக்கியமான அறிகுறி. வெகு சிலருக்கு கண்ணில் வித்தியாசமான காட்சிகளும் தெரிவதுண்டு. ஆனால் மனச்சிதைவு நோய்க்கான முக்கிய அறிகுறி காதுகளில் புலன்பேதலித்து இல்லாத குரல்கள் ஒலிப்பது தான்.
3. பேச்சில் தெளிவும் கோர்வையும் இல்லாத நிலை மனச்சிதைவில் ஏற்படும்.
இதற்குக் காரணம் இது எண்ணம் பாதிக்கப்பட்டுள்ள நோய். எண்ணம் தெளிவாக இருந்தால் தான் பேச்சும் தெளிவாக அமையும். பிறழ் நம்பிக்கைளைப் பற்றிப் பேசும் போது மட்டும் இவர்களது பேச்சில் தெளிவும் கோர்வையும் தென்படும். இதற்குக் காரணம் எண்ணமே அந்த பிறழ் நம்பிக்கையால் உருவாவதுதான்.
மனச்சிதைவு நோய்களில் பல வகைகள் உண்டு. நெடுநாள் நோயில்தான் இது சிலருக்குத் தென்படும். சிலருக்கு மனச்சிதைவு நோய் வெளியே தெரியாத அளவு இருந்தாலும் அது எச்சரிக்கையோடும் தெளிவோடும் பேசவும் முடியும். இதனாலேயே இந்த அறிகுறியை மனச்சிதைவு நோயின் அத்தியாவசிய அடையாளமாகக் காண முடியாது.
4. வித்தியாசமான விபரீதமான நடவடிக்கைகளும் எண்ணம் பாதிக்கப்பட்டதன் விளைவுதான்.
குப்பையைப் பொறுக்கி வீட்டில் பத்திரப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் சில மனச்சிதைவு நோயாளிகளிடம் தென்படும்.
இவ்வளவு மோசமான நிலைக்குப் போனபின் சிகிச்சையினால் முழுமையான குணமும் எதிர்பார்க்க முடியாது.
சிலருக்கு Catatonic எனும் தசையிறுக்க மாறுபாடு தோன்றும். அதாவது நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவு அவர்களது உடல் வளைந்து நெடுநேரம் இருக்கும். இவ்வகையில் சிலருக்குத் தலையணை இல்லாமலேயே கழுத்து படுக்கையிலிருந்து சற்று உயரத்தில் இருக்க உறக்கமும் வரும். இவ்வகை அறிகுறி தென்பட்டால் அதற்கு மின் அதிர்வு சிகிச்சை ECT நல்ல பலன்களை அளிக்கும்.
5. உணர்ச்சிகளை சமூகத்திலிருந்து வெளிப்படுத்த இயலாமை, ஒதுங்குதல் ஆகியவை நோயின் முதிர்நிலையில் தென்படும் அறிகுறிகள்.
மகிழ்ச்சியோ துயரமோ அந்தந்தத் தருணங்களில் முகத்தில் இவர்களுக்கு வெளிப்படாது. மாறாக எப்போதும் முகத்தில் வெறுமை தெரியும் உணர்ச்சிகள் மழுங்கிவிட்டது (Blunt) போலத் தோன்றும்.
6. சமூகப் பங்கேற்பில் பின்னடைவு
இதை நோயின் அறிகுறியாகத் தீர்மானிக்குமுன் அந்த நபரின் பின்னணியைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் எப்போதுமே ஒதுங்கி வாழும் தன்மையுடையவராக, கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்து வந்திருக்கிறாரா இல்லை நோயின் தாக்கத்திற்குப்பிறகு இப்படி ஒதுங்க ஆரம்பிக்கிறாரா என்று புரிந்துகொள்ள வேண்டும்.
ஏற்கனவே செய்து வந்த, ஆர்வம் காட்டி வந்த விஷயங்களை ஒதுக்கிப் புறக்கணித்து அக்கறையில்லாமல் இருப்பது அறிகுறிதான் என்றாலும் இதற்கும் பின்னணியைப் பார்க்க வேண்டும்.
ஒரு நிகழ்வோ தோல்வியோ விளைவித்த துக்கத்தின் துயரத்தின் சோகத்தின் காரணமாகச் சிலர் இப்படி இருக்கக் கூடும்; இவர்கள் மனச்சிதைவு நோயாளிகள் அல்ல. காரணமின்றி இந்நிலை வருவதுதான் மனச்சிதைவு நோய்; மேலும், இந்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து அவர்களது சமூக நிலைமையில் சீரழிவு தெரிய ஆரம்பித்தால் அப்போது இதை மனச்சிதைவு நோயின் அறிகுறியாகக் கருத வேண்டும்.
மனச்சிதைவு நோய் பல்வேறு வகைகளில் வெளிப்படும் என்பதால் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைத்துக் குறிப்பிடுகிறார்கள். மனச் சிதைவு வகைகள்:
Paranoid எனும் வேறுபட்ட மனச் சிதைவு வகை
இதில் காதுகளில் குரல் கேட்பதை விடவும் பிறழ் நம்பிக்கைகளே அதிகம். பேச்சில், செயலில் எவ்விதக் கோளாறும் இவர்களிடம் தென்படாது.
Disorganised எனும் நிலைகுலைந்த மனச்சிதைவு
இதில் பேச்சு, செயல், உணர்ச்சி வெளிப்பாடு எல்லாமே மாறுபட்டிருக்கும். இவர்களிடம் பேசிப் புரிந்து கொள்ளவே முடியாது. பார்த்த உடனேயே இவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது எளிதில் புலப்படும்.
Catatonic எனும் தசையிறுக்க மாறுபாடுள்ள விதம்
இதில் இவர்களது உடல் வித்தியாசமான கோணங்களில் வளையும். சிலருக்கு இந்நிலையில் கோபம் என்பது வெறிபோல ஆவேசமாய் வரும். சில சமயங்களில் இவர்கள் நாம் பேசுவதை எதிரொலிப்பார்கள், அதாவது “என்ன வேண்டும்?” என்று கேட்டால் “என்ன வேண்டும்?” என்று பதில் வரும். “என் பெயர் ருத்ரன்” என்று நான்சொன்னால், அந்த நபர் “என் பெயர் ருத்ரன்” என்று எதிரொலிப்பார். சிலர் நம் செய்கைகளை அப்படியே கண்ணாடிப் பிம்பம் போலவும் செய்வார்கள். சிலர் எதுவுமே பேசாமல் மௌனமாகவும் இருப்பார்கள். இவ்வகை நோய் தற்பொழுதில் அதிகமாக வெளிப்படுவதில்லை என்றாலும் சிலர் இப்படி இன்னும் நோய்வாய்ப்படுகிறார்கள்.
Undifferentiated எனும் வகுக்க முடியா மனச்சிதைவு:
மேல் குறிப்பிட்ட மூன்று வகைகளிலும் உள்ள அறிகுறிகள் இல்லாமல் மனச் சிதைவு நோய் என்று பரிசோதனையில் தெரியவரும் விதம். இந்த வெளிப்பாடு.
Residual எனும் விஞ்சி நிற்கும் மனச்சிதைவு
இவ்வகையில் எந்த அறிகுறிகளும் தென்படாவிட்டாலும் இவர்களது நடைமுறைகளிலும் செயல்முறைகளிலும் வித்தியாசம் தெரியும். தேர்ந்த நிபுணர்கள் மட்டுமே இதைக் கண்டு பிடிக்க முடியும்.
இதே கட்டத்தில் பிறழ் நம்பிக்கைகள் மட்டுமே இருக்கும் தீவிர மனநோயான Delusional Disorder எனும் பிறழ் நம்பிக்கை நோயையும் தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் இதுவும் மனச்சிதைவு நோயின் ஒரு வகை என்றும், பிறர் இது ஒரு தனிவித நோய் என்றும் கூறுகிறார்கள்.
பிறழ் நம்பிக்கை நோயில்
– நாம் உண்மையாக இருக்குமோ என்று யோசிக்கும் வகையில் பிறழ் நம்பிக்கைகளை இவர்கள் விவரிப்பார்கள். “என் மனைவி கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறாள்” என்று பல விஷயங்களை நுணுக்கமாக வர்ணிப்பார்கள். மனச்சிதைவு நோயாளியின் பிறழ் நம்பிக்கையில் “வானொலி மூலம் பிரதமர் என்னை வேவு பார்க்கிறார்” என்பது போன்ற நிச்சயமாக நம்பமுடியாத பிறழ் நம்பிக்கைகளைத் தெரிவிப்பார்கள்.
– இவர்கள் நினைவுத்திறன், கவனம், ஆற்றல் எதிலும் குறை இருக்காது.
– தங்கள் பிறழ் நம்பிக்கையின் விளைவாக இவர்களுக்கு மனநிலையில் மாறுதல்கள் தோன்றும்.
– இதிலும் பல வகைகள் உண்டு. ‘தன்னைத் தாக்க சதி செய்கிறார்கள் ‘என்மேல் பொறாமை’ ‘எனக்கு நிறைய சக்தி உண்டு’ எனக்கு உடல் கெட்டுவிட்டது…. என்று பல விதங்களில் பிறழ் நம்பிக்கைகள் வருவதுண்டு.
நோய்க்கான காரணம் என்ன என்று இதுவரை துல்லியமாக யாரும் நிர்ணயிக்க முடியவில்லை. மூளையின் சில பகுதிகளில் ஏற்படும் ரசாயன மாற்றம் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. பரம்பரையாகவும் இந்நோய் வர வாய்ப்புள்ளது.
மனவியல் ரீதியாக இளவயதில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளின் தாக்கம் போன்ற காரணங்களால் இந்நோய் வருவதில்லை என்பது மட்டும் நிச்சயமாக கூறப்படுகிறது.
இந்நோய் ஆண்-பெண், இன-மத -மொழி வேறு பாடின்றி, 15 முதல் 45 வயதிற்குள் எவருக்கும் தோன்றலாம் என்பது ஒரு புள்ளி விவரம். எல்லா நாடுகளிலும் அரை முதல் ஒரு சதவிகிதம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது.
மிக இளம் வயதில் தொடங்கினால் இந்நோய் சிகிச்சைக்கு மிகப் பெரிய சவலாக அமைகிறது. ஆரம்ப கட்டங்களில் சிகிச்சை தந்தால் பெரும்பாலும் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
சிகிச்சை முறைகள்
மருந்துகளை இந்நோய்க்கெனக் கண்டுபிடிக்குமுன் பல வகைகளில் மனச் சிதைவு நோயாளிகள் கொடுமைப் படுத்தப்பட்டார்கள். சங்கிலிகளில் பிணைத்து வைப்பதும் அத்தகைய முறைகளில் ஒன்று. இன்னும் நம் நாட்டில், நம் மாநிலத்தில் சில இடங்களில் மத-கலாச்சார பாகுபாடின்றி இந்த முறை மூடநம்பிக்கைகளால் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.
மருந்துகள் மட்டுமே இந்நோய்க்கான முக்கியமான சிகிச்சை முறை.
சிலருக்கு, அவர்களது நடவடிக்கைகளால் தங்களுக்கும் பிறருக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய கட்டங்களில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டிய நிலை ஏற்படும். மருந்து உட்கொள்ள மறுக்கும் கட்டங்களில் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கும்.
பொதுவாக மருந்துகளிலேயே நல்ல பலன்கள் இருந்தாலும் சிலருக்கு மின் அதிர்வு சிகிச்சை தேவைப்படும். மயக்க மருத்துவ நிபுணரின் உதவியோடு தரப்படும் இவ்வகைச் சிகிச்சையில் ஆபத்து கிடையாது.
ஓர் அறுவை சிகிச்சையில் உள்ள அளவுக்குத்தான் இதிலும் மிக அரிதாகச் சிக்கல்கள் தோன்றும். மின் அதிர்வு சிகிச்சையின் பிறகு சிலருக்கு மறதி தோன்றும், ஆனால் காலப் போக்கில் (சராசரியாக ஆறு மாதத்தில் )இது சரியாகி விடும்.
மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அதன் அளவைக் குறைப்பதோ கூட்டுவதோ ஒரு மனநல மருத்துவரின் கண்காணிப்பிலேயே அமைய வேண்டும். நவீன கண்டுபிடிப்பாகச் சில மருந்துகள் இப்போது புழக்கத்தில் உள்ளன. இவற்றை உட்கொள்ளும் போது இரத்தப் பரிசோதனை அவ்வப்போது செய்துகொள்ள வேண்டும்.
பக்க விளைவுகள்
மருந்துகளினால் சிலருக்கு பக்க விளைவுகள் தோன்றலாம்.இந்த விளைவுகளை எளிதாகவும் விரைவாகவும் சரிசெய்ய மாற்று மருந்துகள் உள்ளன. கண்கள் மேலே செருகுவது, கழுத்தில் இறுக்கம், உடலில் விரைப்பு போன்ற விளைவுகள் சிலருக்குத் தோன்றலாம். பார்க்க இவை அச்சம் தருமளவு இருந்தாலும், சிகிச்சையில் இதைச் சரி செய்வது மிகவும் எளிதானது. எளிமையானது. சிலருக்கு மாதவிலக்கு தள்ளிப் போகும், மலச்சிக்கல் ஏற்படும்.
மருந்துகளைத் தொடர்ந்து மருத்துவர் நிறுத்தச் சொல்லும் வரை உட்கொள்ள வேண்டும். எந்த அறிகுறியும் இல்லாத கட்டத்திலும் தொடர்ந்து ஒரு வருடமாவது மருந்து தருவது ஒரு வகை சிகிச்சை முறை. இது அந்தந்த நோயாளியின் தன்மை மற்றும் அவருக்குள்ள நோயின் தாக்கம் ஆகியவற்றை வைத்துத்தான் முடிவு செய்வது சாத்தியம்.
சிலருக்கு முதல் முறை சிகிச்சை செய்தாலேயே முழுமையான நலனைக் காண முடிகிறது. சிலருக்கு மருந்துகளை நிறுத்தி ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் இந்நோய் தாக்கக் கூடும். வெகு சிலருக்கு எந்த சிகிச்சையும் பலனளிப்பதில்லை.
மறுவாழ்வுப் பயிற்சி (Rehabilitation) என்பது பெரும்பான்மையான மனச்சிதைவு நோயாளிகளுக்கு அவசியம். இதிலும் பல வகைகளும் நிலைகளும் அவரவர் தேவைக்கேற்ப உள்ளன. மறுவாழ்வுப் பயிற்சியில் சிகிச்சைக்கான நாடகப்பயிற்சி எனும் Drama Therapy இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் நடத்தப் படுகிறது.
பொதுவாக மனோவசியம் என்றழைக்கப்படும் ஆழ்நிலை உறக்க வைத்தியம் (Hypnosis) இந்நோய்க்கு உதவாது. மருந்துகள் மட்டுமே பலன்களைத் தருகின்றன.
மருந்து தருவதோடு குடும்பத்தினர் பொறுப்பு இந்நோயில் முடிவடையக் கூடாது. இவர்கள் இந்நோய் பற்றித் தெரிந்து கொண்டு, மீண்டும் இந்நோயின் தாக்கம் தென்பட்டால் ஆரம்பத்திலேயே மீண்டும் சிகிச்சையளிக்க உதவும். தவிரவும் இந்நோயுற்றவர்களிடம் எப்படிப் பழகுவது பேசுவது என்பதையும் குடும்பத்தினர் கற்றுக் கொள்ள வேண்டும். இவையனைத்துமே மறுவாழ்வு பயிற்சியின் முக்கிய அம்சங்களாகும்.
இந்நோயினை அடையாளம் காண, ஆரம்ப அறிகுறிகள்:
1. உறக்கமின்மை
2. உணவில், உடையில் நாட்டமிண்மை
3. கவனக் குறைவு
4. செயல்முறைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஒரு வித்தியாசம்
5. இதுவரை ஆர்வம் காட்டிய விஷயங்களிலிருந்து விலகல்.
ஆகியவற்றோடு, மனச்சிதைவுக்கான முக்கிய அறிகுறிகளான பிறழ் நம்பிக்கைகளும், காதில் குரல்கள் ஒலிப்பதும் இருந்தால் உடனே மனநல மருத்துவ சிகிச்சை அவசியம்.













